பறக்கும்படை அதிகாரிகள் தேர்தலில் அரசியல்வாதிகளிடம் செய்யாமல் வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர்

காஞ்சிபுரம், ஏப்.9: தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார். இதில், மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது. கொரோனா அச்சுறுத்தல் என்ற பெயரில் சிறு வியாபாரிகளை அதிகாரிகள் அதிகளவில் இடையூறு செய்கிறார்கள். வணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசாமல், அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஏற்கனவே சிறு வியாபாரிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கி போய் இருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையில் மீண்டும் சாலையோர வியாபாரிகளிடம் கொரோனாவை காரணம் கூறி அப்புறப்படுத்த நினைப்பது தவறானது. அதே நேரத்தில் மதுக்கடைகளை அடைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதே நிலை தொடர்ந்தால் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநாடு வரும் மே 5ம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்ற இருக்கிறோம். பறக்கும்படை அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பணம் பறிமுதல் செய்வதற்கு பதிலாக, வணிகர்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற பணத்தை தான் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திருப்பித்தர வேண்டும்.

தமிழகம் முழுவதும் எந்த பிரச்னைகளும் இல்லாமல் தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையரை பாராட்டுகிறோம் என்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வி.ரங்கநாதன், மாவட்ட செயலாளர் ஏ.வேலுமணி உட்பட செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Related Stories: