சின்னசேலம் அருகே பரபரப்பு ₹5 லட்சம் நகை, பணம் கொள்ளை போலீசார் தீவிர விசாரணை

சின்னசேலம், ஏப்.9:  சின்னசேலம் அருகே ரூ. 5 லட்சம் நகை, பணம் கொள்ளைபோன சம்பவம் குறித்து டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன்(48), விவசாயி. இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு நிவேதா என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர். மகள் நிவேதாவை விழுப்புரம் பகுதியில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக நிவேதா தாய்வீடு வந்து தங்கி இருந்துள்ளார்.நேற்றுமுன்தினம் இரவில் சீனுவாசன், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் வீட்டு வராண்டாவில் படுத்திருந்தனர். மகள் நிவேதா தனது குழந்தையுடன் வீட்டினுள் படுத்து இருந்தார். இவர்கள் வீட்டை தாழ்ப்பாள் போடாமல் படுத்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மர்ம நபர் உள்ளே புகுந்து உள்ளே தாழ்ப்பாள் போட்டுள்ளார். பின் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் ரூ. 1,02,000 ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிவேதாவின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துள்ளார். அப்போது திடுக்கிட்ட அவர் எழுந்து பார்த்தபோது மர்ம நபர் இருப்பதை கண்டு சத்தம் போட்டுள்ளார்.

அதிகாலையில் மகளின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட சீனுவாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் கதவை திறந்தபோது உள்தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரியவந்தது. அதற்குள் மர்ம நபர் பின்வாசல் வழியே தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர் ஓடிய பக்கம் சென்று தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. அந்த நபர் சுமார் ரூ.4லட்சம் மதிப்புள்ள 8.5 பவுன் தாலிசெயின் உள்ளிட்ட நகைகள், ரூ.1,02,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டார். மேலும் பர்சில் இருந்த நகை அடகு சீட்டு உள்ளிட்டவைகளை பின்புறம் இருந்த கிணற்றில் வீசியும் சென்றுள்ளார்.  இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீனுவாசன் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கனியாமூர் கூட்ரோடில் இருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்து சம்பவ நேரத்தில் யாரேனும் சாலையை கடந்துள்ளார்களா என்றும் விசாரணை நடத்தினார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் ராஜவேல் வந்து கதவு பீரோ உள்ளிட்ட இடங்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்தும் விசாரணை நடத்தினார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் கொள்ளையால் மக்கள் பீதி

சின்னசேலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மேலூரில் 3 இடங்கள், எலியத்தூர், பைத்தந்துறை, சிறுவத்தூர், பூண்டி, அம்மையகரம், சமத்துவபுரம், எலவடி போன்ற இடங்களிலும் தொடர் கொள்ளை சம்பவங்கள் மற்றும் டாஸ்மாக் கொள்ளை சம்பவம் என நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சின்னசேலம் காவல் சரக பகுதியில் தான் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தபோதிலும் மீண்டும், மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் மக்கள் பிதியில் உள்ளனர்.

Related Stories: