கிராம ஊராட்சி பகுதிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்படும் துப்புரவு பணியாளர்கள் கண்டுகொள்ளாத உள்ளாட்சித்துறை

புதுக்கோட்டை, ஏப். 4: புதுக்கோட்டை கிராம ஊராட்சிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்பரவு பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை உள்ளாட்சித்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினசரி கிராம பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை கால்வாய்களில் இறங்கி சுத்தப்படுத்துதல், குப்பைகளை அகற்றி வருகின்றனர். கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு காலுறை, கையுறை, கழிவை எடுத்து வெளியே போடும் தகடு, சோப்பு ஆகிய உபகரணங்கள் வழங்க வேண்டும். ஆனால் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இதுபோன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண் வெட்டி உள்ளிட்ட குப்பையை அகற்ற பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மட்டுமே கொடுக்கின்றனர். புதுக்கோட்டை கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை இதுவரை உள்ளாட்சித்துறை வழங்காமல் உள்ளது.

இதுகுறித்து பணியாளர்கள் கூறியதாவது: கிராம ஊராட்சி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுவோர் போதிய பாதுகாப்பு இல்லாமல் தான் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உள்ளாட்சித்துறை நிர்வாகம் கணக்கில் எடுத்து கொண்டதாக தெரியவில்லை. கிராம பகுதியில் துப்புரவு பணியாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உள்ளாட்சித்துறையின் கடமையாகும். துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் சில பகுதிகளில் அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட துப்புரவு இயந்திரங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதுமாதிரியான இயந்திரங்கள் இருப்பதாக தெரியவில்லை. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இனியாவது உள்ளாட்சித்துறை விரைந்து துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: