கச்சிராயபாளையம் அருகே பதற்றம் அண்ணா சிலைக்கு தீவைப்பு பாமகவினர் மீது வழக்கு

சின்னசேலம், ஏப். 3: கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்கு தீவைப்பு சம்பவத்தால் திமுகவினர் திரண்டு போராட்டம் நடத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி மாரியம்மன் கோயில் அருகே உள்ள அண்ணா சிலைக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் துணி பற்றி எரிந்து சிலை கரும்புகையால் கருப்பாக மாறியது. நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிலை எரிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் காட்டு தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து கள்ளக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் அரவிந்தன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கண்ணன், வடக்கநந்தல் நகர செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் சிலை முன்பு திரண்டனர். மேலும் சிலையை எரித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிலையை கழுவி புதுவேட்டியால் மறைத்து கட்டி வைத்தனர்.

 

பாமக பிரமுகர் மீது வழக்கு: மாதவச்சேரி திமுக கிளை செயலாளர் செம்மலை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ராமதாஸ் கூட்டத்துக்கு பாமக பிரமுகர் ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 20 பேர் சென்றதாகவும், பின் ஊர் வந்து இரவு 12 மணி வரை திமுகவை திட்டி பிரச்னை செய்து கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணிக்கு அண்ணா சிலை எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. பாமகவினர் 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>