புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி,  ஏப். 2:  புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் வீட்டை உடைத்து நகைகளை மர்ம  ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி,  தட்டாஞ்சாவடி விவிபி நகரில் வசிப்பவர் அம்பிகாபதி (63). இவர் ஊசுடு (தனி)  தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த நாகரத்தினத்தின் மகன் ஆவார். தற்போது  அம்பிகாபதிக்கு காங்கிரசில் சீட் கிடைக்காத நிலையில் தனது தந்தை தொகுதியில்  சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக  வில்லியனூர், பொறையூர்பேட் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் அவ்வப்போது  தங்கி ஊசுடு தனி தொகுதியிலேயே தேர்தல் களப்பணியில் ஈடுபட்டார். கடந்த 29ம்தேதி காலை தட்டாஞ்சாவடி விவிபி நகரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு  சென்ற அம்பிகாபதி பொறையூர்பேட்டில் தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை அவரது  செல்போனில் தொடர்பு கொண்ட, விவிபி நகர் ஏடிஎம் சென்டர் காவலாளி, உங்கள்  வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் லைட் எரிவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வேட்பாளர் அம்பிகாபதி அங்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்ட  போது முன்பக்க கதவு மட்டுமின்றி நுழைவு வாயில் இரும்பு கேட் பூட்களும்  உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றபோது அங்கு  பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த சுமார் 14 பவுன் நகைகள்,  வெள்ளி பொருட்கள் மற்றும் தேர்தல் செலவுக்கு வைத்திருந்த ரொக்கப்பணம்  ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின்  மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து கோரிமேடு இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ  கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் கொள்ைள நடந்த வீட்டை பார்வையிட்டனர்.  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும்  இந்த துணிகர கொள்ளை தொடர்பாக ஏடிஎம் காவலாளி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த  சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: