பொன்னை அருகே இரவோடு இரவாக முள்வேலி போட்டு திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் அமையும் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

பொன்னை, மார்ச் 30: பொன்னை அருகே அரசு நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடத்தை அமைக்க ஒதுக்கிய நிலத்தில் தனியார் ஆக்கிரமிக்க வருவாய்த்துறையினர் துணை போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க இப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதனால் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னை ஊராட்சிக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் கட்ட இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில் அரசு கட்டிடம் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை தனிநபர்கள் இரவோடு இரவாக செடிகளை நட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், `காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் வருவாய் துறையினருக்கு பலமுறை தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் இப்பகுதியில் பொன்னை ஊராட்சிக்குட்பட்ட குப்பைகளை ஆற்றங்கரைகளிலும் சாலையோரங்களிலும் கொட்டி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு புகார் அளித்தும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்புகளை மீட்டு இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: