மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் வாக்குறுதி

பெரம்பலூர்,மார்ச் 30: மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்செல்வன் வாக்குறுதி வழங்கினார். பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக இளம்பை தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கோனேரிபாளையம், எசனை, இரட்டைமலைசந்து, கீழக்கரை, பாப்பாங்கரை, வடக்குமாதவி, சோமண்டோபுதூர், சமத்துவபுரம், காந்திநகர், எளம்பலூர், எம்ஜிஆர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், எசனையில் மட்டும் ரூ.15 கோடி மதிப்பில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எளம்பலூரில் வங்கி வசதி, பள்ளி தரம் உயர்வு, சாலை வசதி, கால்நடை மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல் பல கிராமங்களில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500, மாதத்திற்கு 6 சிலிண்டர், இலவசமாக வாசிங் மிஷின், சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பன உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்றார். பிரசாரத்தின்போது பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், ஒன்றிய பொருளாளர் பன்னீர் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: