முகூர்த்த நாளில் திரண்ட பக்தர்கள் பழநியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பழநி, மார்ச் 25: முகூர்த்தநாளின் காரணமாக பழநியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.முகூர்த்த நாள் மற்றும் பங்குனி உத்திர காலமான நேற்று பழநியில் கடும் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் இரவு முதலே அடிவார பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. லாட்ஜ்கள் மற்றும் திருமண மண்டபங்கள் முழுவதும் புக் செய்யப்பட்டிருந்தன. பங்குனி உத்திர தீர்த்தக்காவடி எடுத்து வந்த பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்கமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களின் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று காலையில் அருள்ஜோதி வீதி மற்றும் அய்யம்புள்ளி சாலைகளில் போக்குவரத்து நெரிசலின் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் தேங்கி நின்றன. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் அடிவார பகுதிகளில் கார், வேன் போன்ற வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: