ஆவடி தொகுதியில் 9 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கினேன்: திமுக வேட்பாளர் நாசர் பெருமிதம்

ஆவடி, மார்ச் 23: ஆவடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும், திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21, 22, 23, 34, 35 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு ஆவடி வடக்கு நகர செயலாளர் ஜி.நாராயணபிரசாத் தலைமையில் தொண்டர்கள் தாரை, தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது, வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது, “ஆவடி தொகுதியில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் டிப்ளமோ படித்து ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவது எனது கவனத்திற்கு வந்தது. எனது அறக்கட்டளை மூலமாக, அவர்களுக்காக நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், 100க்கும் மேற்பட்ட பிரபல கம்பெனிகள் கலந்துகொண்டன. அதில், பங்கேற்ற 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையின்றி தவித்த இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன ஆணை வழங்கினோம். எப்போதும் மூடி கிடக்கும் ஆவடி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். அங்கு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். மாதந்தோறும் பொதுமக்கள், பொதுநல சங்கங்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்வேன். ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க தேவையான உதவிகளை செய்வேன்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்வேன். மகளிருக்கு தொழில் கூடங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடங்களை அமைத்து கொடுப்பேன். எனவே, நீங்கள் எனக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரசாரத்தில் திமுக மாணவர் அணி இணைச்செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் அந்தரிதாஸ், மாநில விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார், மாநகர தலைவர்கள் இ.யுவராஜ், ஏ.ராஜசேகர் மதிமுக மாநகரச்செயலாளர் எஸ்.சூரியகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் மு.ஆதவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பூபாலன், ராஜன், மயில்வாகனன், ராமானுஜம், திமுக மாவட்ட பிரதிநிதி பதாகை சிங்காரம், ஆவடி வடக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, துரைராஜ், சித்ராவிநாயகம், ஜான் ரொசாரியோ, கா.மு.ஜான், வட்டச்செயலாளர்கள் மதிசெல்வம், நரேஷ், ஜெயந்தன், ரமேஷ்பாபு, பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வாணன், ரவிச்சந்திரன் உள்பட முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: