ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

ஆறுமுகநேரி, மார்ச் 23: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆறுமுகநேரி, காயல்பட்டினம், பழையக்காயல் பகுதிகளில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.6ம் தேதி நடக்கிறது. பதற்றமான பகுதிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு கொடிஅணி வகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆறுமுகநேரி, மூலக்கரை, காயல்பட்டினம், பழையக்காயல் பகுதிகளில் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

ஆறுமுகநேரியில் மெயின்ஜங்சனில் துவங்கிய ஊர்வலம் முக்கிய சாலைவழியாக விநாயகர்கோயில் தெரு, காந்தி தெரு, பூவரசூர் பகுதி வழியாக ஊர்வலம் நடந்தது. அதனையடுத்து மூலக்கரை கிராமத்தில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து காயல்பட்டினம் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து கடற்கரை வரை போலீஸ் அணிவகுப்பு நடந்தது.    பழையக்காயலில் ரட்சன்யபுரத்தில் துவங்கிய ஊர்வலம் மஞ்சள்நீர்காயல் செல்லும் சாலை வரை நடந்தது. இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்இன்ஸ்பெக்டர்கள், உள்ளுர் போலீசார் உட்பட 130 துணை ராணுவபடையினர் கலந்துகொண்டனர்.

Related Stories: