அரூர், ஆக.3: தர்மபுரி மாவட்டம், அரூரிலிருந்து கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செல்லும் வழியில், ஜம்மணஅள்ளி கூட்ரோடு உள்ளது. இங்கு ஜம்மணஅள்ளி, பறையப்பட்டி, தென்னகரம், ஆலாமரத்துப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறிது தூரம் நடந்து வந்து பேருந்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகளுக்கான நிழற்கூடம் இருந்தது. ஆனால், நிழற்கூடம் சேதமடைந்தது. இதனால், இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு நிழற்கூடம் அமைக்கப்படவில்லை.
இதனால், பேருந்திற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், சர்க்கரை ஆலை பணியாளர்கள், பொதுமக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் மழை பெய்யும் சமயத்தில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இடித்து அப்புறப்படுத்தப்பட்ட ஜம்மணஅள்ளி கூட்ரோடு பகுதியில், மீண்டும் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
