ஆடிப்பெருக்கையொட்டி திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆறு படித்துறைக்கு புதிய வர்ணம்

 

தஞ்சாவூர், ஆக.3: ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் திருக்காட்டுப்பள்ளியில் காவிரி ஆறு வறண்டு கிடந்தாலும், அதன் படித்துறைக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. காவிரி டெல்டாவில் உற்சாகமாக கொண்டாடப்படும் விழாக்களுள் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்றாகும். இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆனால் காவிரியில் தண்ணீர் இல்லை. தஞ்சையில் விவசாயம் இல்லை. ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை. இந்த சூழ்நிலையில் கிராம மக்கள் பண்டிகையை கொண்டாட மனமின்றி அதற்கான முன்னேற்பாடுகளையும் மந்த கதியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவுக்காக திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறை புது வர்ணம் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அதற்கு நேர் எதிரான தோற்றத்தில் காவிரி ஆறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறையில் வழக்கமாக ஆடிப்பெருக்கு என்றாலே களை கட்டும். ஆடிப்பெருக்கு நாளன்று அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் கூட்டமாக இந்த படித்துறைக்கு வந்து பழங்கள், காப்பரிசி, காதோலை, கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை தலைவாழை இலையில் படைத்து காவிரி அன்னைக்கு தீபம் காண்பித்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு தண்ணீர் வராத சூழலில் படித்துறை அருகே கரடு, முரடான பகுதிகளில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பேரூராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து தண்ணீர் மோட்டார் மூலம் இறைத்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காவிரி பெருக்கெடுத்து ஓடி கிளையாறுகளில் தண்ணீர் வந்து ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதுபோல் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் இருக்காது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நகர்ப்புறங்களில் செய்வது போல கைப் பம்புகள், குடிநீர் குழாய் அடியில் படையல் வைத்து வழி பட கிராம மக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

 

Related Stories: