திருவாரூர் மாவட்டத்தில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்தவேண்டும்: குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தகவல்

 

திருவாரூர், ஆக 2: திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியாத்தால் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர்.
குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து, தேவையான மாற்று ஏற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் செய்யப்படுத்தப்பட்டு வரும் 667 கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழு அளவில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஊரக பகுதிகளுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுகுடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கோடைக்காலம் மற்றும் அவசர கால தேவைகளை முன்னிட்டு கூடுதல் குடிநீர் விநியோகத் திட்டங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குடிநீர் விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: