தஞ்சாவூர் அருகே மின்சார பற்றாக்குறையால் செண்டுமல்லி சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

 

தஞ்சாவூர், ஜூலை 31: தஞ்சாவூர் அருகே மின்சாரப்பற்றாக்குறையால் செண்டுமல்லி சாகுபடி பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, மருங்குளம், திருக்கானூர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டாரை மூலம் செண்டுமல்லி மற்றும் கோழிகொண்டை உள்ளிட்ட பல்வேறு மலர் சாகுபடிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது ஆடி மாதம் என்பதால் கோயில்கள் மற்றும் விசேஷங்களுக்குப் பூக்களின் தேவை அதிகரித்து, சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, வழக்கத்தை விட உயர்ந்து ஒரு கிலோ செண்டுமல்லி பூ ரூ.70 வரை நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது.

ஆனால், பூக்களுக்கு நல்ல சந்தை விலை கிடைத்தும், பயிர்களுக்குத் தேவையான மும்முனை மின்சாரம் சீராகக் கிடைக்காததால் பூ சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். போதிய மின்சாரம் இல்லாததால் நிலங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பாய்ச்ச முடியாமல் செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ. 70,000 முதல் ரூ. 80,000 வரை பெரும் தொகையை முதலீடு செய்துள்ள நிலையில், விளைச்சல் குறைந்து கடுமையாக நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சந்தையில் நல்ல விலை நிலவும் இந்தச் சூழலில், மும்முனை மின்சாரத்தை தற்போதைய 8 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரமாக உயர்த்தினால் மட்டுமே தங்களால் சாகுபடியில் லாபம் பார்க்க முடியும் என கூறுகின்றனர். எனவே, பயிர்களைக் காப்பாற்றவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக 16 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கிட தமிழக அரசும் மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: