ஜெயங்கொண்டம், ஜூலை 30: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த தெருவில் சுமார் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போனது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற செயலாளரிடம் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாப்பாக்குடி-கல்லாத்தூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் குடிநீர் உடனடியாக விநியோகம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
