தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாதத்திற்கு ஒருமுறை மின்வாரியம் சார்பாக ஒரு நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு மின் நிறுத்தம் செய்யப்பட்டும் தினமும் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை மின் துண்டிப்பு நடைபெறுகிறது. மாதத்திற்கு ஒருமுறை மின் நிறுத்தம் செய்யப்பட்டும் மீண்டும் நாள்தோறும் மின் நிறுத்தம் செய்வது எதற்கு எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனால் முதியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சை மாநகரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் வீடுகளில் மின் அழுத்தமும் குறைந்த அளவில் தான் உள்ளது. வீடுகளில் உள்ள மின்விசிறிகள் அனைத்தும் மின் அழுத்த குறைவு காரணமாக வேகமாக இயங்குவதில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தினமும் குறைந்தது 3 மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுவது எந்த வகையில் நியாயம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து தினமும் மின்வெட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: