முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

 

முத்துப்பேட்டை, ஜூலை. 30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முத்துப்பேட்டை அடுத்த வட சங்கேந்தி, அரியலூர், குமாரபுரம் கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாகவே குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை சங்கேந்தி கடத்தெருவில் விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உமேஷ்பாபு, கீதா மோகன் மற்றும் வைரவமூர்த்தி, சரவணன், நடராஜன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், உடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்தமுத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு மோகனராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது அதிகாரிகள் தரப்பில் நாளை காலை (இன்று) கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளையும் இதன் ஒப்பந்தக்காரரையும் வரவழைத்து குளறுபடியை சரி செய்து குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்கப்படும்” என வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலை இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பொதுமக்களும் வெளியு+ர் பயணிகளும் சிரமம் அடைந்தனர்.

 

Related Stories: