மயிலத்தில் போலி ரசீது வைத்து ஜெலட்டின் வெடி பொருள் கடத்தியவர் கைது

 

மயிலம் ஜூலை 30: மயிலம் வழியாக சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகளை கடத்தி வருவதாக மயிலம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில், மயிலம் ஓம்சக்தி நகர் அருகே போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வானூர் அடுத்துள்ள எறையூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்ராசு மகன் ரமேஷ்(23) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அவரிடம் 400 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 375 மீட்டர் வயர் ஒதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், வெடி பொருட்கள் வாங்கிய ரசீது ஒன்றை காண்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரமேஷ் காண்பித்த ரசீது குறித்து விசாரணை நடத்தியபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள பாதிராபுலியூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து பஞ்சமூர்த்தி என்பவரின் பெயரில் போலியாக ரசீது பெற்று ஜெலட்டின் குச்சி மற்றும் வயர் ஆகியவற்றை வாங்கி சென்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மயிலம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 400 ஜெலட்டின் குச்சி மற்றும் 375 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலி ரசீது பெற்று, ஜெலட்டின் குச்சிகளை வாங்கி சென்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குடோன் உரிமையாளர் சேகர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிராப்புலியூரை சேர்ந்த குடோன் உரிமையாளர் சேகர் மீது கடந்த சில மாதங்களில் பல வழக்குகள் போலீசார் பதிந்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: