பழநி, ஜூலை 30: பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை. பழநி மற்றும் ஓட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் தற்போது மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதியில் நீர்நிலைகள் வற்றிப்போய் உள்ளது. புற்கள் காய்ந்து போய் உள்ளன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோம்பைபட்டியை சேர்ந்த விவசாயி துரை கூறியதாவது: எங்கள் பகுதிக்குள் காட்டு யானைகள் அதிகளவு வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
