வீரவநல்லூர், ஜூலை 29: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 26ம் தேதி மாலை புறப்பட்ட பயணிகள் ரயிலானது செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. வீரவநல்லூர் ரயில் நிலையத்தை கடந்து கல்லிடைக்குறிச்சி நோக்கி ரயில் சென்றபோது, மர்மநபர் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் ரயில் இன்ஜினில் இருந்து 5வது பெட்டியில் பயணம் செய்த தென்காசி பெரியபிள்ளை வலசையை சேர்ந்த துரைப்பாண்டியனின் மனைவி தமிழ்செல்வி (49) என்பவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் செங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
பின்னர் அவர் இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த ரயில்வே எஸ்ஐக்கள் மகாகிருஷ்ணன், மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கல்லிடைக்குறிச்சி முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சந்தோஷ்குமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரை கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்பேரில் தென்காசி கிளை சிறையில் அடைத்தனர்.
