தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி அருகே பைக்கில் வந்து ஆடுகளை திருடும் இளம்ஜோடி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பலர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை சுற்றுவட்டார பகுதியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இரவில் மீண்டும் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவது வழக்கம். இந்நிலையில் பைக்கில் வரும் இளம்ஜோடி, இப்பகுதியில் ஆட்டை திருடிச் செல்வது சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இக்காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் பகுதிக்கு வரும் இளம்ஜோடி நோட்டமிட்டபடி யாரும் இல்லாதபோது ஒரு ஆட்டை பிடித்துக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளது.இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
