திருமயம், ஜூலை 28: திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அப்பகுதி குளிர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்த போதிலும் மாலை நேரத்தில் அப்பகுதியில் திடீரென பலத்த இடி மின்னலுடன் பெய்த மழை ஓரளவுக்கு அப்பகுதி உஷ்ணத்தை குறைத்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று திருமயம் பகுதியில் வெயில் சுட்டெரித்தது. அதேசமயம் நேற்று மாலை தேக்காட்டூர், நமணசமுத்திரம், லெம்பலக்குடி, புலிவலம், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வானத்தில் கருமேக கூட்டங்கள் தோன்றி இடியுடன் மிதமான மழை பெய்தது.
இது பகல் நேரத்தில் வாட்டி வதைத்த வெயிலில் இருந்து அப்பகுதி மக்களை மீட்டெடுத்தது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து நிம்மதியடைந்தனர். அதேசமயம் நேற்று மாலை லெனா விலக்கு பகுதியில் நடைபெறும் வார சந்தையில் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனைக்காக எடுத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த நிலையில் திடீரென பெய்த மழை வியாபாரத்தை பாதித்ததோடு விற்பனைக்காக எடுத்து வைத்த பொருள்கள், காய்கறிகள் நனைந்தது. இதே போல் வாரம் வாரம் அப்பகுதியில் மழை பெய்து விற்பனைக்காக எடுத்து வைத்த பொருட்கள் நனைவதால் வியாபாரிகள் வேதனையடைந்தனர். இதேபோல் விராலிமலை சுற்று பகுதிகளில் கனமழை பெய்தது.
விராலிமலை சுற்று பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தகித்து வந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தனர். இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பெரும்பாலான பகுதிகளில் மழை மேகங்கள் சூழ்ந்திருந்தது. சற்று நேரத்தில் மழை பெய்ய தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்தது மாலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
