விவசாயிகள் பயனடையும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்களில் விதிகள் தளர்த்தப்படுமா?

 

தஞ்சாவூர், ஜூலை 28: குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்களில் விதிகளை தளர்த்த வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: தமிழக முழுவதும் குறுவை சாகுபடி விவசாயிகள் நலன்கருதி, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை, இடுபொருட்கள் வழங்கி விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால், தற்போது தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தினால் மழை இல்லாமல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாகவுள்ளதால் இந்த ஆண்டு வழக்கமாக ஜூன் 12ல் மேட்டூரில் தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

இதனால், டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகினர் தமிழக விவசாயிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள குறுவை சாகுபடி பயிர் செய்யும் விவசாயிகள் பம்பு செட் மோட்டார்கள் மூலம் தண்ணீர் கொண்டு குறைந்தபட்ச குறுவை சாகுபடி பயிர்கள் செய்து வரும் நிலையில், தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர் செய்து உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை வழங்கியிட நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளிடம் மாவட்டம்தோறும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேளாண் உயர் அதிகாரிகள் மிகவும் கடுமையான உத்தரவுகளை போட்டு மிக பெரிய குழப்பத்தை விளைவித்து வருவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையையும். கஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குறுவை சாகுபடி பயிர் செய்து அறுவடை முடிந்த பின்பு போட்டோ எடுக்க வேண்டும் எனவும், குடும்ப அட்டையில் ஒருநபர் வீதம் குறுவை சிறப்பு தொகுப்பு ஊக்க தொகை தர சொல்வது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கஷ்டத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே குறுவை சாகுபடி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு காலம் கடத்தாமல் விதிமுறைகளை தளர்த்தியும் சிறு, குறு விவசாயிகள், அதிக நிலம் உள்ள பெரிய விவசாயிகளும் பாதிக்காத வண்ணம் உடனடியாக குறுவை சிறப்பு தொகுப்பு ஊக்க ஊதியம் மற்றும் இடுப்பொருட்களை விரைவாக விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: