தாம்பரம்-தூத்துக்குடி சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூலை 28: தாம்பரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக தூத்துக்குடிக்கு 8 முறை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், 8 ஆயிரத்து 152 பேர் பயணம் செய்துள்ளனர். 121 சதவீதம் நிரம்பிய இந்த சிறப்பு ரயிலை ஆன்மிக சுற்றுலாவுக்கு வசதியாக நிரந்தரமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி-தாம்பரம் இடையே தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருவதால், இந்த ரயிலை நிரந்தரமாகவோ அல்லது வாரத்தில் 3 முறை இயக்கும் ரயிலாகவோ மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களின்படி, இந்த ரயில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி முதல் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு ரயில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி வரை தலா 8 முறை இயக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-தூத்துக்குடி சிறப்பு ரயிலில் மொத்தம் 8,152 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரு சேவைக்கு சராசரியாக 1,019 பயணிகள் பயணம் செய்துள்ளதால், 121 சதவீத பயன்பாடு பதிவாகியுள்ளது. அதேபோல், தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயிலில் 7,464 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரு சேவைக்கு சராசரியாக 933 பயணிகள் பயணம் செய்துள்ளதால், 111 சதவீத பயன்பாடு பதிவாகியுள்ளது. இந்த ரயிலில் மொத்த முன்பதிவு இருக்கைகள் 836 மட்டுமே உள்ள நிலையில், அதைவிட அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தியிருப்பது, இந்த சேவைக்கு மக்களிடையே உள்ள வர வேற்பை வெளிப்படுத்துகிறது.

எனவே, சிறப்பாக இயங்கி வரும் இந்த ரயிலை நிரந்தர எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றவோ அல்லது குறைந்தபட்சம் வாரத்தில் 3 முறை இயக்கவோ தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த ரயில் சேவை தூத்துக்குடி மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு மட்டுமின்றி, ஆன்மிக சுற்றுலா மேற்கொள்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இதன் இயக்கத்தை நிரந்தரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: