தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி மாவட்டத்தின் 37வது எஸ்பியாக சிவபிரசாத் பொறுப்பேற்றார். சட்டம், ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த சிவபிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய எஸ்பியாக சிவபிரசாத், நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 2016ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சிவபிரசாத் விருதுநகரில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கினார். தொடர்ந்து 2020ம் ஆண்டு மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராகவும், பின்னர் மதுரை, தேனி மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். கடந்த 2025ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் 37வது எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய எஸ்பி சிவபிரசாத் கூறுகையில், போதைப்பொருள் ஒழிப்பு, ரவுடிகளை ஒடுக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சட்டம், ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது ஏடிஎஸ்பிக்கள் சகாயஜோஸ், ஆறுமுகம், டிஎஸ்பிக்கள் சுனில்குமார், கண்ணன், செல்வராஜ், குரு வெங்கட்ராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
