காரைக்குடி, ஜூலை 28: காரைக்குடியில் கணவருடன் சேர்க்க வைக்கக் கோரி குழந்தையுடன் இளம்பெண் மாமனார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காரைக்குடி ஆலங்குடியார் வீதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் ரமேஷ். இவருக்கும் மதுரையை சேர்ந்த மகாலட்சுமி (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 45 நாட்களில், ரமேஷ் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதற்கிடையே கர்ப்பிணியான மகாலட்சுமிக்கு வளைகாப்பு போடுவது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் வீட்டுக்கு சென்ற மகாலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையே பல மாதங்களுக்கு பிறகு குழந்தையை பார்க்க, ரமேஷின் பெற்றோர் வந்துள்ளனர். மருமகளை தங்கள் வீட்டிற்கு வரும்படி அவர்கள் அழைத்தபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பின்னர் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரமேஷின் பெற்றோர் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மகாலட்சமி கூறியதாவது: மாமனார் குடும்பத்தினர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, தேவகோட்டை குடும்ப நலநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. குழந்தையுடன் என்னால் வந்து செல்ல முடியாததால் மதுரைக்கு மாற்றப்பட்டது. ஆனால் மாமனார், மாமியார் ஆஜராகாததால் வழக்கு டிஸ்மிஸ் ஆனது. பின்னர் குழந்தைக்கான பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிடும்படி வழக்கு தொடர்ந்தேன்.
அதனை விசாரித்து மாதந்தோறும் ரூ.13000 வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கடந்த 8 மாதங்களாக பராமரிப்பு செலவும் வழங்காமல், வெளிநாட்டில் உள்ள கணவருடன் பேசவும் விடாமல் தடுக்கின்றனர். மகளுடன் நான் வந்ததால், மாமனார், மாமியார் வேண்டுமென்றே வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப்படையினரிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. எனவே என் மகளுடன் கணவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன். என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு கூறினார்.
