சிவகங்கை, ஜூலை 28: காளையார்கோவில் அருகே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை மாரந்தை கிராமத்தினர் நேற்று முற்றுகையிட்டனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்டது மாரந்தை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரந்தை கண்மாய்க்கும், அருகில் உள்ள தளிர்தலை கிராம கண்மாய்க்கும், கோளாந்தி காரைக்குளத்திலிருந்து நாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் நாட்டார் கால்வாயை தூர் வாரும்போது. மாரந்தை கண்மாய்க்கு பிரிந்து செல்லும் கால்வாயை மூடினர். இதனால் மாரந்தை கண்மாய்க்கு நீர் வரத்து முழுமையாக தடைப்பட்டது.
இதுகுறித்து கிராமத்தினர் பலமுறை சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இந்த பிரச்னை தொடர்பாக அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் கால்வாயை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால் மீண்டும் கிராம மக்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உடனடியாக வரத்து கால்வாயை தூர்வாரி, 15 நாட்களுக்குள் அதுகுறித்த அறிக்கையை கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு சென்ற நீர்வளத்துறையினர் பெயரளவிற்கு மட்டும் கால்வாயின் முகத்துவாரத்தை சிறிது சமப்படுத்தி விட்டு கால்வாயை முழுமையாக சுத்தம் செய்யாமல் சென்றுள்ளனர்.
நேராக செல்லும் கால்வாய் பகுதியில் தடுப்பணை அமைத்திருப்பது போன்ற தோற்றம் உருவாகும் வகையில், அதிக அளவில் மண்ணை கொட்டிய அவர்கள், அதனை புகைப்படம் எடுத்துவிட்டு கால்வாயை முழுவதுமாக சுத்தம் செய்யாமல் விட்டுச்சென்றுள்ளனர். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த மாரந்தை கிராமத்தினர் அங்குள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் இந்த பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தங்கள் கிராமத்தின் சார்பில் முறையிட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
