வருசநாடு, ஜூலை 28: மயிலாடும்பாறை அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைதொழு கிராமத்திற்கான சுடுகாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் மற்றும் காத்திருப்போர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் போதிய அளவு பராமரிப்பு பணிகள் ஏதும் இல்லாத காரணத்தால் சுற்றுச்சுவர் மற்றும் காத்திருப்போர் அறை சேதமடைய தொடங்கியது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சுற்றுச்சுவரில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்படுகிறது.
அதே போல காத்திருப்போர் அறையில் மேற்கூரை சேதமடைந்து சிமென்ட் பகுதிகள் உடைந்து கம்பிகள் வெளியில் நீட்டியவாறு உள்ளது. காத்திருப்போர் அறை மேலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டு இருக்கிறது.இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பாக மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோம்பைத்தொழு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மயானத்திற்கான காத்திருப்போர் அறை எரியூட்டும் கொட்டகை மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும். அதேபோல் காத்திருப்போர் அறையை இடித்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
