பட்டாசு வெடிவிபத்து எதிரொலி; சிவகாசியில் போலீசார் தொடர் சோதனை: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர்கள் கைது

 

சிவகாசி, ஜூலை 28: சிவகாசி அருகே நடந்த பட்டாசு வெடிவிபத்தினை தொடர்ந்து, போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து பள்ளபட்டி பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பட்டாசு கடை அருகே பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிவகாசி டிஎஸ்பி அனில்குமார் ஆலோசனையின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் திருத்தங்கல் தேவராஜ் காலனியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த கனகராஜ் (73), செல்வராஜ் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் திருத்தங்கல்- விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் இருந்த தகர செட்டில் கணபதி (37) என்பவர் சட்டவிரோதமாக ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு போலீசார் சாத்தூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏழாயிரம்பண்ணை
வெம்பக்கோட்டை அருகே உள்ள வி.துரைச்சாமிபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ் (39) தலைமையில் போலீசார், துரைச்சாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது துரைசாமிபுரத்திலிருந்து சேதுராமலிங்கபுரம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர். அதில் எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசுகளை, அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்த பட்டாசு ஆலை உரிமையாளர் மூக்காண்டி, பெரிய முனியசாமி (50) சத்யராஜ்(40) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல, பேர்நாயக்கன்பட்டி பகுதியில் காலி இடத்தில் பட்டாசு தயாரிப்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேர்நாயக்கன்பட்டி அடுத்த பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள காலியிடங்களில் வைத்து கம்பி மத்தாப்பு தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து கம்பி மத்தாப்புகளை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிராதமாக காலி இடத்தில் பட்டாசு தயாரித்த அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார்(47) மற்றும் ஒத்தையால் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(36) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 

Related Stories: