நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை டவுனில் ஆர்ப்பாட்டம்

 

நெல்லை ஜூலை 27: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை டவுனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பெண்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறக் கோரியும், அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை டவுனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் உள்ள நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்தாய் வாழ்த்துக்கு 3வது இடம் என்ற அறிவிப்புக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நிர்பந்தம் கொடுக்கும் தமிழக கவர்னர் மற்றும் துணைபோகும் நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுரேந்திரன், ஏஐசிசிடியு மாவட்ட பொது செயலாளர் கணேசன், விவசாயிகள் சங்கம் கருப்பசாமி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நிர்வாகிகள் திலகவதி, அன்புச்செல்வி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, துர்க்கை முத்து, செல்வம், செல்வ கணபதி, முத்தம்மாள், மாரியம்மாள் மற்றும் முப்பிடாதி, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: