மேகதாது திட்டத்தை கைவிட்டு, வீணாக கடலில் கலக்கும் 2100 டிஎம்சி மழைநீரை கர்நாடக அரசு பயன்படுத்த வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூலை 27: மேகதாது திட்டத்தை கைவிட்டு மேற்கு நோக்கி பாயும் நீரை பயன்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ள கர்நாடகா முதல்வரை, தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல் நாதன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரை சந்திக்க எடுத்துள்ள முடிவு தாமதமானது என்றாலும் கூட வரவேற்கத்தக்கது. இதற்கு முன்பு இருந்த பல தமிழக அமைச்சர்களும் கர்நாடக முதலமைச்சர்களும் பலமுறை காவிரி நீர் பிரச்சினைக்காக பேசி இருந்தும் தீர்வு இல்லை. தற்போது முதல்வர் விஜய் மிக அவசியமாக தண்ணீரை கேட்டு பெற வேண்டும். மேகதாட்டு அணை திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு அதற்கு மாற்று திட்டம் வர வேண்டும். கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுதோறும் பெய்கின்ற மழையின் அளவு சராசரியாக 1700 டிஎம்சி முதல் 2,100 டிஎம்சி.

இந்த மழைநீர் கர்நாடகாவில் உள்ள மேற்கு நோக்கி பாயும் 9 நதிகள் வழியே மேற்கே அரபிக் கடலில் சுமார் 195 கிலோ மீட்டர் மட்டுமே பயணித்து கலந்து விடுகிறது. ஆண்டுதோறும் கர்நாடகாவில் பெய்கின்ற மழை நீர் அதே மாநிலத்தில் பெய்து அதே மாநிலத்திலேயே அரபிக் கடலில் கலக்கின்ற இயற்கை நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மழைநீரில் சுமார் 300 டிஎம்சி தண்ணீரை மட்டும் நீர் மேல் ஏற்று திட்டத்தின் மூலம் நேத்ராவதி நதியில் இருந்து ஹேமாவதி அணையுடன் மலைக்குடைவு TUNNELS திட்டத்தின் மூலம் இணைத்து நான்கு மாநில காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது சாத்தியம். இதை கர்நாடக மாநிலத்தில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் தலைமை பொறியாளராக பொதுப்பணித் துறையில் பணியாற்றி உலக வங்கியின் நீர்ப்பாசன ஆலோசகராகவும் நீரியல் நிபுணராகவும் இருந்து தொலைநோக்கு பார்வையுடன் திட்ட அறிக்கையை தந்து சென்ற மறைந்த டாக்டர் பவானி சங்கர் கொண்டு வந்த நேத்ராவதி ஹேமாவதி திட்டத்தை செயல்படுத்தினால் யாருக்கும் எந்த காலத்திலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். மேலும் கர்நாடக மாநிலத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்கள், புதிய சாகுபடி பரப்புகள் அதிகரித்துக் கொண்டு செயல்படுத்த முடியும்.

தொழில்நுட்ப ரீதியாக விஞ்ஞான ரீதியாக சாத்தியமான திட்டத்தை 2003- 2004ம் ஆண்டில் கர்நாடகா மாநில உழவர் பிரதிநிதிகள் தமிழ்நாடு மாநில உழவர் பிரதிநிதிகள் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகளில் கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக பங்கேற்ற பவானி சங்கர் திட்டத்தை செயல்படுத்தி 50 ஆண்டுகால காவிரி நதி நீர் பிரச்சனைக்கு யாருக்கும் பாதகம் இல்லாமல் பிரச்சனை இல்லாமல் நிரந்தர தீர்வை மேற்கொள்ளலாம். எனவே மேகதாட்டை திட்டத்தை கைவிடும் படி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா முதலமைச்சருக்கு அவசியமான ஆலோசனையாக முன்வைக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கர்நாடகாவிற்கு தேவையான நீர், மின் உற்பத்தி, குடிநீர் தேவைகள் மற்றும் போதுமான பாசனம் உறுதியாக கிடைக்கும் என்பதை தெளிவாக எடுத்து வலியுறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இது ஒன்றுதான் நிரந்தர சாத்தியமான தீர்வாக இருக்கும் என்பதை தமிழ்நாட்டு உழவர்கள் நாங்கள் சொல்லவில்லை.

இந்த மிக அருமையான திட்டத்தினை கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தலைமை பொறியாளராக பணிபுரிந்து நீரியல் நிபுணராக இருந்து உலக வங்கிக்கு நீர் பாசன ஆலோசகராகவும் இருந்த நிபுணர் பவானி சங்கர் வழங்கிய விரிவான தொலைநோக்குடன் கூடிய திட்டத்தை வலியுறுத்த வேண்டும். மேகேதாட்டு திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் சுதந்திரத்திற்குப் பின்பு மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 6000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏற்கனவே 200 ஆண்டுகளாக வளர்ந்திருந்த மிக உயரமான அடர்த்தியான மரங்கள் எல்லாம் தேயிலை தோட்டம் அமைப்பதற்காக வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் இன்றைக்கு மழைப் பொழிவில் பற்றாகுறை, மழை நீர் பிடிப்பு பகுதிகளில் பருவநிலை மாற்றம் இரண்டும் ஏற்படுகிறது.

குடகு மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் புதிதாக 4 கோடி மரங்கள் வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை நபார்டு வங்கி நிதி உதவியுடன் உடனே செயல்படுத்திட தமிழக முதல்வர் வலியுறுத்தி சொல்ல வேண்டும். இத்தகைய சாத்தியமான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கர்நாடக மாநில முதல்வரிடம் தெளிவாக எடுத்து வலியுறுத்த தமிழ்நாடு காவிரி குடும்ப உழவர் பிரதிநிதிகளையும் தமிழக முதல்வர் தவறாமல் அழைத்து சென்று வற்புறுத்திட வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல் நாதன் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: