மானாமதுரை, ஜூலை 27: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன், அக்காள்மடம், மண்டபம் தொண்டி, திருப்பாலை, காரங்காடு, மீமீசல் உள்ளிட்ட இடங்களில் பெரும்பான்மையாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். இது தவிர ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கணிசமான அளவில் இவர்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் வேளாங்கண்ணிக்கும், தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயத்திற்கும் திருவிழா காலங்களில் இப்பகுதி மக்கள் அதிக எண்ணிக்கையில் செல்வது வழக்கம். இதன்படி நேற்று தூத்துக்குடி பனிமய மாத பேராலயத்தின் 444வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி வரை பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து ஏராளமானோர் மதுரை சென்று, பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு ரயில்களில் செல்கின்றனர்.
சிலர் குழுவாக கார், வேன்களை புக் செய்து தூாத்துக்குடி செல்கின்றனர். கார், வேன் வாகனங்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே தூத்துகுடி செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பிரான்சிஸ் கூறுகையில், ‘‘ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் ஆண்டுதோறும் தூத்துக்குடி, வேளாங்கண்ணி செல்வது வழக்கம். நேற்று தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திருவிழா துவங்கி உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கவேண்டும். இந்த ரயில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி செல்லும் வகையில் இயக்கினால், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
