அம்மன் கோயில் திருவிழாவையொட்டி 157 ஆண்டுகளாக தொடரும் மஞ்சள் நீர் ஊற்றும் விழா: மானாமதுரையில் கொண்டாட்டம்

 

மானாமதுரை, ஜூலை 27: மானாமதுரையில் வசிக்கும் பொதுமக்கள், தொடர்ந்து 157 ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும், அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் ஊற்றும் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 17ம் தேதி ஆடி முளைப்பாரி உற்சவம், பொங்கல் விழா துவங்கியது. கடந்த 24ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அலகு குத்தி காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் முளைப்பாரி வளர்த்து முக்கிய வீதிகளின் வழியே கொண்டு வந்து அலங்கார குளத்தில் கரைத்தனர்.

ஒருவாரம் நடந்த விழா நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. முத்துமாரியம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்த பின் தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன், மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும், திருமணம் ஆன, திருமணம் ஆகாத முறை பெண்கள் மீது ஆண்களும் என மாறி மாறி மஞ்சள் தண்ணீரை உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர். இந்நிகழ்வில் முதியவர்களும் பங்கேற்று ஆடிப்பாடினர். இதனால் அப்பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாற காட்சியளித்தது. இந்த விழா தொடர்ந்து 157 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இதனை கொண்டாட வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களும் வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: