சென்னை: டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் தூரத்திற்குள் பார்கள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேல் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளோடு இணைந்து பார்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்களை ஏலம் எடுப்பதில் பல போட்டிகள் இருக்கும். இருந்த போதும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த ஏலத்தில் பார்களை கைப்பற்றும் வகையில் பழைய நடைமுறை நீடித்து வந்தது.
இதனை புதிதாக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி டாஸ்மாக் மதுபான கடைகளையொட்டி மது கூடங்கள் நடத்த ஆன்லைன் மூலம் டெண்டர் விடும் போது இடத்தின் உரிமையாளர் தடையில்லா சான்று தேவை என்ற விதி காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மதுபான பார்கள் நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை மூலம் இனிமேல் மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் மதுபான பார்கள் அமைக்க முடியும்.
மேலும் 15 சதுர மீட்டர் குறைந்தபட்ச அளவு என்பது 20 சதுர மீட்டர் என்று மாற்றப்பட்டது. அதாவது குறைந்தபட்ச அளவு 205 சதுர அடிகள் மது கூடம் இருக்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபான பார் ஒப்பந்தம் டெண்டர் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் வழிவகைகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
