உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் மோதல்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 23: உளுந்தூர்பேட்டை அருகே நேற்று காலை ஓடும் அரசு பேருந்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்துக்கு பேருந்தை டிரைவர் ஓட்டிச் சென்று நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்திலிருந்து பாண்டூர், அரளி, செம்மணங்கூர் வழியாக உளுந்தூர்பேட்டைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் அந்த பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் பயணம் செய்தனர். நேற்று காலை 8.30 மணியளவில் இந்த பேருந்து செம்மணங்கூர் கிராமத்தை கடந்து சென்றபோது பேருந்தில் சென்ற மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது பேருந்தில் சென்ற மாணவிகள் சிலரை மாணவர்கள் ஆபாசமாக திட்டியதால் பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு பேருந்தை டிரைவர் ஓட்டிச் சென்று நிறுத்தினார். அதற்குள் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி தப்பிஓடிவிட்டனர். பின்னர் போலீசாரிடம் மற்ற மாணவர்கள், மாணவிகள் சம்பவம் குறித்து முறையிட்டனர். தினந்தோறும் இதுபோன்று ரகளை நடைபெறுவதால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென மாணவிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கேட்டறிந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் பேருந்தில் ஏறி உளுந்தூர்பேட்டை சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு
ஏற்பட்டது.

Related Stories: