சுதந்திர தின 75ம் ஆண்டு கொண்டாட்டம் உப்பு சத்தியாகிரக சைக்கிள் யாத்திரை

மன்னார்குடி, மார்ச் 15: சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டு நிறைவையொட்டி மன்னார்குடியில் இருந்து வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாகிரக சைக்கிள் யாத்திரையை தாசில்தார் தெய்வநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2022ம் ஆண்டு ஆக.15ம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பிரதமர் தலைமையில் 259 உறுப்பினர்கள் கொண்ட தேசிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விழா குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரையிலான நடை பயணம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள சத்தியாகிரக நினைவு தூண் அருகில் இருந்து துவங்கிய வேதாரண்யம் வரையிலான உப்பு சத்தியாகிரக சைக்கிள் யாத்திரை நேற்று காலை மன்னார்குடி வந்தது. இங்கிருந்து ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியை சேர்ந்த என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் 50 பேர்களுடன் புறப்பட சைக்கிள் யாத்திரையை தாசில்தார் தெய்வநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், டிஎஸ்பி இளஞ்செழியன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இளங்கோவன், ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி என்சிசி அலுவலர் லெப் ராஜன், என்எஸ்எஸ் அலுவலர் பிரபாகரன், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். சைக்கிள் யாத்திரை மன்னார்குடியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்றது.

Related Stories: