தஞ்சாவூர், ஜூலை 21: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே விவசாயிகள் பயிர் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி எந்த நிபந்தனையும் இன்றி 5 ஏக்கருக்கு உட்பட்ட சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பா, சாகுபடிக்கு புதிய கடன்களை வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கு மேல் பயிர் செய்த விவசாயிகளின் பயிர்க்கடனை 50% தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா மாவட்டத்தின் உயிர் நாடியாக உள்ள மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இரும்புதலை கடைத்தெருவில் இருந்து ஊர்வலமாக சென்று இரும்புதலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் குரு.சிவா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்தப் போராட்டத்தில் பிரதீப்குமார், அசோக், மகேந்திரன், பிரவீன்ராஜ், விக்னேஸ்வரன் , வெங்கடேசன், கோவிந்தராஜ், ராஜேந்திரன், பெரியண்ணா, பாலகிருஷ்ணன், குருநாதன், சத்தியராஜ், பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
