சேதுபாவாசத்திரம் கடைமடையில் நேரடி விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

தஞ்சாவூர், ஜூலை 21: சேதுபாவாசத்திரம் கடைமடையில் நேரடி விதைப்புக்கூட செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடந்த 10 வருடங்களாக 60 சதவீதம் நேரடி விதைப்பும், 40 சதவீதம் நடவுப்பணிகளும் செய்து ஒரு போகம் சம்பா சாகுபடி நடைபெற்றது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வரை முழுமையாக நடைபெறாத சம்பா சாகுபடி 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் கிடைத்து முழுமையாக சம்பா சாகுபடி நடைபெற்றதோடு ஏரி, குளங்களும் நிரப்பப்பட்டது. நிலத்தடி நீர்மட்டமும் குறையவில்லை. அதேசமயம் மேட்டூர் அணை திறப்பதை எதிர்பார்க்காமல் மே, ஜூன் மாதங்களில் பெய்யும் மழையைகொண்டு கடைமடை விவசாயிகள் நேரடி விதைப்பை செய்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களாக கடைமடை பகுதியில் மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. ஏரி, குளங்கள் வறண்டு விட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையும் திறக்கவில்லை. ஆடிப்பட்டத்தை பெரிதும் விரும்பும் விவசாயிகள் மத்தியில் சாகுபடியே நடைபெறுமா? என ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

இதேநிலை நீடித்தால் ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடைபெற்று வந்த நெல் சாகுபடியும் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி சாகுபடி செய்வதற்கும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மேட்டூர் அணை திறக்காத நிலையில் மழையும் இன்றி நேரடி விதைப்பும் செய்ய முடியாமல் கடைமடை விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே வருணபகவான் கருணையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories: