திருக்கோவிலூர், ஜூன் 21: திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறித்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவதால் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் திலகவதி(20), வெளியூர் சென்றிருந்த இவர் கடந்த 18ம் தேதி அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை வாசலில் படியில் அமர்ந்து கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கீழே இறங்கி திலகவதியிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றதும், திலகவதி அந்த வாலிபரை துரத்திக் கொண்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். திருக்கோவிலூரில் அதிகாலை இளம்பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
