ராமநாதபுரம், ஜூலை 21: பாம்பன் அருகே விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் வழியில் உள்ள தரவைதோப்பு கிராமத்தில் மனமகிழ்மன்றம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாம்பன், அக்காள்மடம், தரவைதோப்பு பகுதி மீனவ கிராமமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து தரவைதோப்பு கிராமமக்கள் கூறும்போது, ஆன்மீக புண்ணிய பூமியான ராமேஸ்வரம் தேசிய சுற்றுலாதளமாக உள்ளது. இங்கு ஆண்டிற்கு கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பழமையான ராமநாதசுவாமி கோயில், நாட்டின் கடைக்கோடி எல்லையான தனுஷ்கோடி, பாரம்பரிய பாம்பன் பாலம், வீர துறவி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி, வரவேற்ற சேதுபதி மன்னர் அமைத்த நினைவு மண்டபம் உள்ளிட்ட பல பாரம்பரியமிக்க இடங்கள் உள்ளன. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், குந்துக்கல்வலசை, குருசடை தீவு உள்ளிட்ட தீவு சுற்றுலா இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், தொன்மையான பகுதிகள் என பல உள்ளது.
இப்படி வரலாற்று சிறப்புக்களை உள்ளடக்கிய ராமேஸ்வரம் தீவு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை, தனியார் மன மகிழ் மன்றம் ஆகியவற்றை திறக்க கடந்த அரசுகள் முன்வரவில்லை, மதுக்கடைகளை திறப்பதற்கு நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ராமேஸ்வரம் பகுதியின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீன்பிடித்தல் போன்ற அன்றாட கடல் கூலி தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையிலும் அக்காள்மடம் அருகே உள்ள தரவைதோப்பு பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மது பார் ஒன்றை திறக்க தற்போதைய அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் வீரத்துறவி விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சாலையில் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவது கவலையளிக்கிறது. எனவே அந்த மது பார் கடையை திறப்பதற்கு கலெக்டர் தடைவிதிக்க வேண்டும். மேலும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் எந்தகாலத்திலும் மது பான கடைகள், பார்களை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. இவ்வாறு தெரிவித்தனர்.
