சிவகங்கை, ஜூலை 21: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மானாமதுரை தாசில்தார் மீது நடவடிக்கை கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நில மோசடிகளை முழுமையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூர் பகுதியில் சுமார் 90 ஏக்கர் அரசு நிலத்திற்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்து அது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். மானாமதுரை தாசில்தார் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை மற்றும் நிலமற்ற குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வீரபாண்டி தலைமை வகித்தார். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
