வறட்சியால் கொய்யா விளைச்சல் பாதிப்பு

 

தர்மபுரி, ஜூலை 20: தர்மபுரி மாவட்டத்தில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மா, கொய்யா, பப்பாளி மற்றும் தக்காளி, சீமை கத்தரிக்காய், சாம்பார் பூசணி, தர்பூசணி, புடலை, அவரை உள்பட பல்வேறு தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. அரூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் சின்னாறு அணை, கேசர்குளிஅல்லா, நாகாவதி, தொப்பையாறு, தும்பலஅள்ளி, வாணியாறு, வரட்டாறு அணை என மொத்தம் 7 அணைகள் உள்ளன.

இந்த அணைகள் மூலம், மொத்தம் 4267.92 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால், நடப்பாண்டு வழக்கத்தைவிட மழையளவு குறைந்ததால் அணைகளில் நீர் மட்டம் படுபாதளத்திற்கு சென்றுவிட்டது. இதன்காரணமாக, விவசாயத்திற்கு பாசன நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  வறட்சி காரணமாக கொய்யா காய்ப்பு குறைந்துள்ளது. தற்போது, கொய்யா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் வரை தொடரும். அதனைத்தொடர்ந்து, மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் கொய்யா சீசன் முடியும். நடப்பாண்டில் ஒரு கிலோ கொய்யா ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: