அரியலூர், ஜூலை 20: அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாகலூர், ரெட்டிப்பாளையம், வாலாஜாநகரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் மிருணாளினி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் சாலைகள், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.24.99 இலட்சம் மதிப்பீட்டில் பெரியநாகலூர் – மண்ணுழி (கி.மீ 0/0-1/660) தார் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விபரம், எஞ்சியுள்ள பணிகள் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, ரெட்டிப்பாளையம் ஊராட்சி, வி.கைகாட்டியில் ரூ.13.43 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தினை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் PMAY (G) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்ல கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விபரம், தொகை விடுவிக்கப்பட்டுள்ள விபரம், எஞ்சியுள்ள பணிகள் விபரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பின்னர், வாலாஜாநகரம் ஊராட்சி, அரசு நகரில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்னையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புங்கை, கொடுக்கப்புளி, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பயிர் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வேளாண் கழிவுகளை நறுக்கும் இயந்திரத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தினை பார்வையிட்டு மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தரம், பராமரிப்பு பணிகள் மற்றும் உற்பத்தி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு, மண்புழு உரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மிருணாளினி, அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கமித்திரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
