தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், கலெக்டருமான சரவணன், கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர், இதுதொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. வீடுகள் தோறும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது விவரங்களை தாங்களே பதிவு செய்துகொள்ளும் சுயக் கணக்கெடுப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை https://se.census.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, தங்களது கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து, தங்களது குடும்ப விவரங்களை முன்கூட்டியே எளிதாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்து, எஸ்இஐடி-யைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும் போது, அந்த எஸ்இ ஐடி-யை வழங்கினால் போதுமானது. இது மிகவும் எளிமையான, விரைவான மற்றும் வசதியான செயல்முறையாகும். எனவே, அனைத்து குடும்பங்களும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் (31ம் தேதி) தங்களது சுய கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் மிக முக்கியமான தேசியப் பணியாகும். கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கு கணக்கெடுப்பு தரவுகள் பெரிதும் உதவுகின்றன. எனவே, ஒவ்வொரு குடும்பமும் தங்களது உண்மையான மற்றும் சரியான விவரங்களை வழங்குவது மிகவும் அவசியம். தர்மபுரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்கு 2,376 கணக்கெடுப்பாளர்களும், 399 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர் உங்கள் இல்லத்திற்கு வரும்போது அவரை வரவேற்று, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, உங்கள் குடும்பம் மற்றும் வீட்டைப் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்.
அனைவரும் இணைந்து இந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இதை தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பில் ஒருவருக்கு நத்தம் பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, பிஆர்ஓ லோகநாதன், தனித்துணை கலெக்டர் ஷெர்லி ஏஞ்சலா, அரூர் தாசில்தார் வள்ளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
