ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தீர்த்தவாரி

 

திருச்செந்தூர், ஜூலை 18: ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தமிழ் மாதங்களில் ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பு, ஆடி மற்றும் தை அமாவாசை, தைப்பூசம் போன்ற நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலையில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி மாதப்பிறப்பான தட்சிணாயன புண்யகால பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து காலசந்தி பூஜையாகி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. ஆடி மாத பிறப்பு, முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக் கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

ஆகஸ்ட் 7ம் தேதி ஆடி கிருத்திகை
தமிழ் மாதத்தில் ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். இந்நாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு என்பதால் அனைத்து முருகன் கோயிலிலும் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி கிருத்திகை திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

 

Related Stories: