கழிவுநீரில் குடிநீர் குழாய்கள் தொற்று நோய் பரவும் அபாயம்

 

சாயல்குடி, ஜூலை 18: சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பல மாதங்களாக சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் கிடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறும்போது: சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பதிக்க வேண்டிய குழாய்கள் பல நாட்களாக கழிவு நீர் கால்வாயில் கிடக்கிறது. இந்த குழாய்களை அப்படியே குடியிருப்புப் பகுதிகளில் பதிக்க உள்ளனர். குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் குழாய்களை சாக்கடை கழிவுநீரில் நீண்டகாலம் போட்டு வைத்து, இந்த குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு கொடுப்பது பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இதனால், குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவி, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உடல் நலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய சாயல்குடி பேரூராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் சுகாதாரம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Related Stories: