கார் பருவ சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு

களக்காடு, ஜூலை 17: திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 5781 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும். இந்நிலையில் கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் நேற்று அணையில் இருந்து எம்எல்ஏக்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், டாக்டர் கிறிஸ்டோபர் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் படலையார் கால்வாய், வள்ளியூரான் கால்வாய், நம்பியாறு கால்வாய்களில் வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற அக்.10ம் தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நாங்குநேரி ராதாபுரம் தாலுகாவின் உள்ள 44 குளங்களும் 5781 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும். நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் ஆயுஸ் குப்தா, நீர்வளத்துறை செயற் பொறியாளர் மணிகண்டராஜா, உதவி பொறியாளர்கள் மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், விவசாயிகள் சங்க முன்னாள் துணை தலைவர் பெரும்படையார், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய், விசிக தென்மண்டல செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் ஈழவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: