பொன்னமராவதி, ஜூலை 17: பொன்னமராவதி கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மற்றும் நகராட்சியிலும் டிஜிட்டல் முறையில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இக்கணக்கெடுப்பில், பாரம்பரிய காகிதப் பதிவுகளுக்கு பதிலாக மின்னணு சாதனங்கள் மூலம் நேரடியாக தகவல்கள் பதிவு செய்யப்படும். இதன் மூலம் தகவல் சேகரிப்பு வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அருணா உத்தரவுப்படி கடந்த மூன்று நாட்கள் 100 கணக்கெடுப்பாளர்களுக்கு திட்டமிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சிகளில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் முறை, தரவு பதிவு செய்யும் நடைமுறைகள், வீடு தோறும் தகவல் சேகரிப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு போன்றவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் முக்கிய பணியாக இருப்பதால், பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை துல்லியமாக வழங்கி, கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பின் மூலம் பகுதியின் மக்கள் தொகை, சமூக மற்றும் பொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் விரைவாகவும் துல்லியமாகவும் சேகரிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகள் கணக்கெடுப்பு வரும் ஆக 1 முதல் 31ம்தேதி வரையும் மக்கள் கணக்கெடுப்பு 2027 பிப் 1 முதல் 27ம் தேதி வரையும் நடக்கிறது. 17-7-2026 முதல் 31-7-2026 வரை சுய கணக்கெடுப்பும் நடக்கின்றது. இந்த கணக்கெடுப்பில் ஒரு வீடு கூட விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் கணக்கெடுப்பாளர்களுக்கு தலா 250 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தனி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. கொன்னப்பட்டி பகுதிக்கு நேரடியாக சில வீடுகளுக்கு சென்று களப்பயிற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி வட்டாட்சியர் பழனிச்சாமி செய்திருந்தார். பயிற்சியை மாவட்ட பயிற்சியாளர்கள் குருந்தலிங்கம் புள்ளியில் வட்டார கல்வி அலுவலர் கலா, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி பேராசியர்கள் வீரையன், கண்ணபிரமகேஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
