வருசநாடு, ஜூலை 17: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீல முத்தையாபுரம், காந்திகிராமம், முத்துநகர், வண்டியூர், வீர சின்னம்மாள்புரம், உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை சரிவர பெய்யாததால், குடிநீர்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் மூல வைகையாற்றில் ஊற்று அமைத்து தண்ணீர் எடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையையேற்று இப்பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தை போக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மூல வைகையாற்றில் உள்ள உரை கிணறுகளும் தூர்வாரப்படுகின்றன. இந்நிலையில் இப்பணிகளை கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சீதாராமன், வினோத்குமார், ஊராட்சி செயலர் பாண்டியன் மற்றும் குடிநீர் ஆபரேட்டர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரி கூறுகையில், ‘‘பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்’’ என்றார்.
