புவனகிரி, ஜூலை 16: பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் சாகர்மாலா எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடலில் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கடலுக்கு அடியில் இருந்து அனைத்து ஹைட்ரோகார்பன், கச்சா எண்ணெய் போன்ற அனைத்தையும் எடுத்து கொள்வதற்கான தொகுப்பு ஒப்பந்தம்தான் இது. இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு களம் இறங்குகிறார்கள். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், கடல் வளத்தையும், கடல்வாழ் உயிரினங்களின் வளத்தையும் அழித்து விடும். இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ள காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமும் அழிவை சந்திக்கும். எனவே ஹைட்ரோகார்பன் எடுக்கும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்தி கைவிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், என்றார்.
